வள்ளுவரின் மருந்தில்லா மருத்துவம் - 6



நமது தேசத் தந்தை மகாத்மாகாந்தி இங்கிலாந்து சென்று படித்தபோது தமது உணவு முறையை மாற்றிக் கொள்ளவே இல்லை. அங்கு அசைவ உணவே அதிகம் கிடைத்து. இருந்தாலும் பல்வேறு சிரமங்களுக்கிடையிலும் எக்காரணத்தைக் கொண்டும் அவர் தமது உணவு உண்ணும் முறையை மாற்றிக் கொள்ளவில்லை. இதனை தமது சத்திய சோதனை நூலில் அவரே குறிப்பிடுவது நோக்கத்தக்கது. அதிகம் உண்ணுவது தமக்குப் பிடித்த உணவு இருந்தால் சிலர் அளவைவிட அதிகமாக உண்பர். இது மிகப்பெரிய உடல்நலக் கேட்டைத் தரும் செயலாகும். எப்போதும் உணவை மிதமாக உண்ணல் வேண்டும். அது உடல் நலத்தைப் பாதுகாக்கும் செயல் எனலாம். உண்ணும்போது சிறிது பசி இருக்கும் நிலையிலேயே நாம் உண்ணுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அது உடலுக்கு எப்போதும் துன்பத்தைத் தராது. அதிகம் உண்பவரை வழக்கில் ‘பெருந்தீனிக்காரன்‘ என்று குறிப்பிடுவர். இப்பெருந்தீனிக்காரனிடத்தில் எப்போதும் நோய் குடிகொண்டிருக்கும். இவ்வாறு உண்பவர்களுக்கு, இதயத்தாக்குதல், உடல் எடை கூடுதல், உடல் பருமனாதல், உடலில் கொழுப்பு அதிக அளவில் ஏற்படுதல், தொப்பை ஏற்படுதல் உள்ளிட்ட பல உடற் கோளாறுகள் ஏற்படும். மிதமாக உண்டால் உடலில் மகிழ்ச்சி என்றும் நிலைத்திருக்கும். அதிகம் உண்டால் நோய், துன்பம் நிலைத்திருக்கும்.நோய் வராமல் செய்யும் வழிமுறையாகவும் இதனைக் கொள்ளலாம். இத்தகைய அரிய மருத்துவ முறையை, 

இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும் 
கழிபே ரிரையான்கண் நோய் (946) 

என வள்ளுவப்பெருந்தகை மொழிவது நோக்கத்தக்கது. 

No comments:

Post a Comment