வள்ளுவரின் மருந்தில்லா மருத்துவம் - 5


உண்ட உணவு செறித்து(ஜீரணமானது) அறிந்து அப்பழக்கத்தை முறையாகக் கடைபிடித்து மாறுபாடில்லாமல், நன்றாகப் பசித்த பின்னர் உணவினை உண்க அதுவே மருந்தில்லா மருத்துவம் என்று இக்குறட்பாவில் வள்ளுவப் பெருந்தகை தெளிவுறுத்தியிருக்கிறார். உணவு வகைகளை, உண்ணும் நேரத்தை மாற்றுதல் பசித்தவுடன் உண்ண வேண்டும். ஆனால் பலர் பசி எடுத்தாலும் அந்த நேரத்திற்கு உண்பதில்லை. அப்போது தேநீரோ அல்லது காபியோ அருந்திவிட்டு காலம் தாழ்த்தி உண்கின்றனர். இன்னும் சிலர் காலை உணவை பதினோரு மணி, பகல் உணவை மூன்று மணி இரவு உணவை பன்னிரெண்டு மணி என சரியான நேரத்திற்கு என்று இல்லாமல் மனம் போன போக்கில் உண்பர். இது வலியச் சென்று நோயை நாமே வரவழைத்துக் கொள்வது போன்றது. இவ்வாறு சரியான நேரத்திற்கு உண்ணாமல் இருப்பதும் நோயினை உடலில் உண்டாக்கும். இதனால் பலருக்கு தீராத வயிற்று வலி (ulcer) ஏற்படுகின்றது. பசி எடுத்தவுடன் உண்ணாமல் இருப்பதால் இரைப்பையில் சுரக்கும் அமிலத்தால் குடல் புண்ணாகி விடுகின்றது. இவ்வாறு ஏற்படுகின்ற புண்ணால் சில சமயங்களில் குடலையே வெட்டி எடுக்கக்கூடிய சூழலும் ஏற்படுகின்றது. 

அதனால் பசி ஏற்பட்ட சிறிது நேரத்தில் உணவு உண்பது உடல் நலத்திற்கு நல்லது. சரி பசிஎடுத்து விட்டது கிடைக்கும் உணவினை உண்ணுவது நல்லதா? எனில் அவ்வாறு செய்யக் கூடாது. அவரவர் உடல்நிலைக்குத் தக்கவாறு ஏற்ற உணவை உண்ணுதல் நலம் பயக்கும். சிலருக்கு எண்ணெய் அதிகம் ஊற்றிச் செய்யப்பட்ட உணவோ, அல்லது அதிகமான காரம், உப்பு, புளிப்பு உள்ள உணவோ ஒத்துக் கொள்வது கிடையாது. 

மேலும் சிலர் சைவ உணவைச் சாப்பிட்டுவிட்டு மாமிச உணவு கிடைக்கின்றது என்பதற்காக சைவத்திலிருந்து அசைவ உணவு முறைக்கு மாறுவர். இவ்வாறு உணவை மாற்றுவதும் நோய்க்கு இடங்கொடுக்கும் செயலாகும். அதனால் அவரவர் உடலுக்கு உகந்த உணவை உட்கொள்ள வேண்டும். அவ்வாறு உண்டு வந்தால் நோயும் வராது. மருந்தும் வேண்டாம். இத்தகைய எளிய மருந்துவத்தை, 

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் 
ஊறுபாடு இல்லை உயிர்க்கு (945) 

என வள்ளுவர் நவில்கிறார். 

No comments:

Post a Comment